ஆசிய கோப்பை : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா?
ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதால், இந்த போட்டிக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதால், மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடாத ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஆட்டத்திற்கு முந்தைய நாள் வியாழக்கிழமை எந்த அசௌகரியமும் இல்லாமல் அவர் பயிற்சி அமர்வில் பேட்டிங் செய்ததால், வங்கதேசத்திற்கு எதிரான விளையாடும் லெவனில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.
ஷ்ரேயாஸ் ஐயரின் ஒருநாள் கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்
2017 டிசம்பரில், இந்தியாவில் நடந்த இலங்கை தொடரின் போது ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய கிரிக்கெட் அணிக்காக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 44 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 45.69 என்ற சராசரியில் 1,645 ரன்களைக் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஃபார்மை தக்கவைத்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 14 அரை சதங்களும் அடங்கும். இந்திய அணியில் நான்காவது இடம் தொடர்ந்து நிலையாக இல்லாத நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தனது இரண்டு சதங்கள் உட்பட அவரது 50+ ஸ்கோர்களில் ஏழு, நான்காவது இடத்தில் பேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்டதாகும்.