ஒலிம்பிக் போட்டிகளில் பச்சை நிற பேனருக்கு அனுமதி மறுப்பு; பின்னணி இதுதான்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 3) பேட்மிண்டன் மைதானத்தில் இருந்து "கோ தைவான்" என்று எழுதப்பட்ட பச்சை நிற பேனரை பாதுகாப்புப் பிரிவினர் அகற்றியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, தைவான் பேட்மிண்டன் வீரர் சௌ தியென் சென் இந்தியாவின் லக்ஷ்யா சென்னுக்கு எதிராக விளையாடும் போது, பார்வையாளர் ஒரு படிக்கட்டில் இருந்து பச்சை நிற பேனரை காட்டி கோஷமிட்டதை அடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு தைவானின் வெளியுறவு அமைச்சகம், ஒலிம்பிக் போட்டிகளில் இது பேச்சுரிமையின் அப்பட்டமான மீறல் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் கொடி மற்றும் பேனர்களுக்கான விதிகள்
இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், ஒலிம்பிக்கின் டிக்கெட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை குறிப்பிட்டு, "விளையாட்டுகளில் பங்கேற்கும் நாடுகள் மற்றும் பிரதேசங்களின் கொடிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்" என்று கூறினார். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, பார்வையாளர்கள் அரசியல் செய்திகளைக் காட்டும் பதாகைகளை எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் நிறமான பச்சை, தைவானின் சுதந்திரம் மற்றும் சுயாட்சிக்கான ஆதரவாளர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது சீனா மற்றும் ஒலிம்பிக்கில் சீன தைபே என அழைக்கப்படும் தைவானின் இடையேயான அரசியல் மோதலால் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.