28 பந்துகளில் 5 விக்கெட்; அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்தை சிதறடித்த 21 வயது ஆஸ்திரேலிய வீரர்
செய்தி முன்னோட்டம்
பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் மாலி பியர்ட்மேன் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 21 வயதான அவர் தனது அறிமுக போட்டியின் முதல் 28 பந்துகளிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியை நிலைகுலைய செய்தார். இறுதியில் 7.4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்த வீரர் என்ற 38 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்தார்.
முடங்கியது இங்கிலாந்து
ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தை முடக்கிய வேகம்
மணிக்கு 140 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட பியர்ட்மேன், இங்கிலாந்தின் நட்சத்திர வீரர்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டாக இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கை 1 ரன்னில் வெளியேற்றினார்.
அடுத்த ஓவரிலேயே நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் ஜோ ரூட்டை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.
தொடர்ந்து ஜோர்டான் காக்ஸ், சாம் கரன் மற்றும் லியாம் டாசன் ஆகியோரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து இங்கிலாந்து அணியை 131 ரன்களுக்குள் சுருட்ட உதவினார்.
டென்னிஸ் லில்லி
டென்னிஸ் லில்லியின் வழிகாட்டுதலும் 2024 அண்டர்-19 உலகக்கோப்பை சாதனையும்
2005 ஆகஸ்ட் 31 அன்று மேற்கு ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பரோ நகரில் பிறந்த மாலி பியர்ட்மேன், சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்தார்.
தனது 15-வது வயதில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டென்னிஸ் லில்லியிடம் பயிற்சி பெற்றுத் தனது பந்துவீச்சுத் திறனை மெருகேற்றினார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.
அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல அவர் முக்கியக் காரணமாக அமைந்தார்.
பிக்பாஷ் லீக்
பிக் பாஷ் லீக் மற்றும் இந்தியா ஏ தொடரில் வெளிப்படுத்திய அபார ஆட்டம்
உள்ளூர் போட்டிகளில் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் பிக் பாஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பியர்ட்மேன், 13 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2025-26 பிக் பாஷ் தொடரில் மிட்செல் மார்ஷ் தலைமையிலான அணி கோப்பை வெல்ல 11 போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உதவினார்.
மேலும் கடந்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம்பெற்று, இந்தியா ஏ அணிக்கு எதிராக 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்திருந்தார்.