Loading...
பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்; முழு விபரம்
பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்தார்

பி.டி.உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய தடகள வரலாற்றில் மிக நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி.உஷாவின் சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் 54.75 வினாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் பி.டி.உஷா படைத்த 55.42 வினாடிகள் என்ற 42 ஆண்டு கால தேசிய சாதனையை வித்யா தகர்த்துள்ளார்.

தடைகளைக் கடந்து சாதனை

ஏழ்மை மற்றும் மருத்துவத் தடைகளைக் கடந்த வீராங்கனை

கோயம்புத்தூரில் 1998-ல் பிறந்த வித்யா ராம்ராஜ் எளிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர்.

குடும்பத்தின் நிதி நெருக்கடியால் இவரையும் இவரது இரட்டைச் சகோதரி நித்யாவையும் தாய் ஈரோட்டில் உள்ள விளையாட்டு விடுதியில் சேர்த்தார்.

பாடியாலா பயிற்சி முகாமில் தங்கியிருந்தபோது மொழிப் பிரச்சனை, உடல்நலக் குறைவு மற்றும் அப்பெண்டிசைடிஸ் அறுவை சிகிச்சை என பல தடைகள் வந்தபோதும், பெற்றோர் விளையாட்டை கைவிட வலியுறுத்திய நிலையிலும் வித்யா தனது தடகளக் கனவை உறுதியுடன் தொடர்ந்தார்.

திருப்புமுனை

பயிற்சியாளரின் வழிகாட்டலும் தடகளப் பயணத்தின் திருப்பமும்

2022-ல் சென்னைக்கு சென்று பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ரத்தோரிடம் பயிற்சி பெறத் தொடங்கியதே வித்யாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது.

சாதாரண ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்திய அவரை, தடை ஓட்டப் பிரிவிற்கு மாற பயிற்சியாளர் ஊக்கப்படுத்தினார்.

இந்த உத்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக, கடந்த ஆசிய விளையாட்டிலும் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்து பதக்கம் வென்றதுடன், இரட்டையர்களாக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் சகோதரிகள் என்ற பெருமையையும் நித்யா-வித்யா ஜோடி பெற்றது.

ADVERTISEMENT

ஒலிம்பிக்

ஒலிம்பிக் அனுபவமும் இந்தியத் தடகளத்தின் புதிய உச்சமும்

2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்று தொடர்ந்து அசத்தி வந்த வித்யா, தற்போது பி.டி.உஷாவின் சாதனையை தனி நபர் ஓட்டத்தில் முறியடித்து இந்திய தடகள உலகின் தாரக மந்திரமாக மாறியுள்ளார்.

விடாமுயற்சியும் சரியான வழிகாட்டலும் இருந்தால் எத்தகைய பின்னணியில் இருந்து வந்தாலும் உலக அரங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு தமிழ்நாட்டின் வித்யா ராம்ராஜ் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

ADVERTISEMENT