100% அபராதத்தை விராட் கோலி - கவுதம் கம்பீர் செலுத்த மாட்டார்கள்! ஏன் தெரியுமா?
ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான ஐபிஎல் 2023 போட்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டன. ஆனால் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் போன்றோர் பிசிசிஐ விதித்த 100 சதவீதம் அபராதம் போதாது என்றும் அவர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். எனினும் ஐபிஎல் நடத்தை விதிகளின்படி குற்றங்கள் வெவ்வேறு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளதால், அதன்படி இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக்கிற்கும் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த அபராதத்தை வீரர்கள் செலுத்த மாட்டார்கள்.
அபராதத்தை வீரர்கள் செலுத்தாததன் பின்னணி
விராட் கோலியை பொறுத்தவரை அபராதம் எவ்வளவு இருந்தாலும், அதை அவர் செலுத்த மாட்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகவே அதை செலுத்தும். இது குறித்து பேசிய ஆர்சிபி அதிகாரி ஒருவர், "வீரர்கள் தங்கள் முழு நேரத்தையும் அணிக்காக அர்ப்பணித்துள்ளார்கள். நாங்கள் அதை மதிக்கிறோம். ஒரு கலாச்சாரமாக, அவர்களின் சம்பளத்தில் இருந்து அபராதத்தை நாங்கள் குறைக்க மாட்டோம்." என்று தெரிவித்தார். அதாவது கோலி மட்டுமல்ல, அணி வீரர்களின் முழு அபராதங்களையும் அணி நிர்வாகமே செலுத்தும். ஐபிஎல்லில் பெரும்பாலான அணிகளில் இது தான் நடைமுறை. லக்னோ அணியிலும் இது தான் நடைமுறை என்பதால் கம்பீர் மற்றும் நவீன்-உல்-ஹக்கின் அபராதத்தை கூட அந்த அணியே செலுத்தி விடும்.