ஒரே மைதானத்தில் டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் குவித்த முதல் வீரர் : விராட் கோலி சாதனை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இன் 36வது போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆன விராட் கோலி தற்போது மீண்டு வந்து 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அவர் அரைசதமடித்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எனினும் கொல்கத்தா அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம், விராட் கோலி தற்போது ஒட்டுமொத்த டி20 வரலாற்றில் ஒரே மைதானத்தில் 3,000 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஒரு மைதானத்தில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியல்
ஒரே மைதானத்தில் அதிக டி20 ரன்கள் எடுத்த பேட்டர்கள் பட்டியலில், 3,015 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து மிர்பூரில் 2,989 ரன்கள் எடுத்த முன்னாள் வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹீம் உள்ளார். ரஹீமின் சக வங்கதேச வீரரும் நட்சத்திர ஆல்-ரவுண்டருமான மஹ்முதுல்லா மிர்பூரில் 2,813 ரன்களுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜில் 2749 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார். இதற்கிடையே ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா அணிக்கு எதிரான அரைசதம் மூலம், விராட் கோலி ஐந்து அரைசதங்கள் அடித்து 333 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்