சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இதே நாளில், இளம் மற்றும் சுறுசுறுப்பான விராட் கோலி முதல் முறையாக இந்திய தேசிய அணியின் ஜெர்சியை அணிந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இந்திய கிரிக்கெட் அணிக்காக 22 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும், அதில் இந்திய அணி 146 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் சொதப்பினாலும், அதன் பிறகு தன்னை மேம்படுத்திக் கொண்டதோடு, பல ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் அணியில் அசைக்க முடியாத வீரராக வலம் வருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் புள்ளி விபரங்கள்
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 275 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 57.32 சராசரியுடன் 12,898 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இதில் சர்வதேச அளவில் ஐந்தாவது அதிக ரன் குவித்தவராக உள்ளதோடு, சச்சினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக சதமடித்தவராகவும்(46) உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை, 2011இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் 49.29 சராசரியுடன் 8,676 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 115 சர்வதேச டி20 போட்டிகளில் 137.96 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,008 ரன்கள் எடுத்துள்ளார். தனது அசாத்திய செயல்திறன் காரணமாக ஐசிசி 2011-20 தசாப்தத்திற்கான சிறந்த வீரர் விருதையும் வென்றுள்ளார். இந்நிலையில், அவரது 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்ககையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.