குறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நானாவது நாளில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக,சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 6 மற்றும் 17 ரன்கள் மட்டுமே எடுத்த கோலி, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் எடுத்தார். இதில் 35வது ரன்னை எடுத்தபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் இந்த மைல்கல்லை வெறும் 594 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதன் மூலம், 27,000 ரன்களை 623 இன்னிங்ஸ்களில் எட்டிய சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி, குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை ஏற்றியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
27,000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர்
27,000 ரன்களை எட்டியதன் மூலம், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது வீரர் ஆவார். இதற்கு முன்னர், சச்சின் டெண்டுல்கர் தவிர்த்து, இலங்கையின் குமார் சங்ககார 648 இன்னிங்ஸ்களிலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 650 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 34,357 ரன்களுடன் சச்சின் முதலிடத்திலும், 28,016 ரன்களுடன் குமார் சங்ககார இரண்டாவது இடத்திலும், 27,483 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்திலும், 27,012 ரன்களுடன் விராட் கோலி நான்காவது இடத்திலும் உள்ளனர்.