அதிசயப் பிறவி! TIME100 Next பட்டியலில் இடம் பிடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியக் கிரிக்கெட்டின் இளம் புயலாக உருவெடுத்துள்ள 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் (TIME) பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிடும் எதிர்காலத்தை வடிவமைக்கும் உலகளாவிய 100 வளர்ந்து வரும் தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் கொண்ட TIME100 Next 2026 பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Phenom (அதிசயப் பிறவி) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே இந்தியர்
பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் மற்றும் ஒரே கிரிக்கெட் வீரர்
இவ்வாண்டு டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ள 100 நபர்களில் விளையாட்டுத் துறையை சேர்ந்த 7 உலகளாவிய தடகள/விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
அதில் இடம்பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரரும், ஒட்டுமொத்தப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும் வைபவ் சூர்யவன்ஷி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 15 வயதே ஆன இவர் இப்பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மிக இளைய நபர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார்.
விஸ்வரூப வளர்ச்சி
12 வயதில் ரஞ்சி முதல் ஐபிஎல் ஆரஞ்சு தொப்பி வரை
பீகார் மாநிலத்தை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, 2024 ஆம் ஆண்டு தனது 12-வது வயதில் இந்திய உள்நாட்டு ரஞ்சி கோப்பைத் தொடரில் அறிமுகமாகி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ₹1 கோடிக்கு வாங்கப்பட்டு, தனது அறிமுக ஐபிஎல் தொடரிலேயே சதம் விளாசி அதிர்ச்சி அளித்தார்.
ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றியதுடன், சச்சின் டெண்டுல்கரை முந்தி இந்திய தேசிய மூத்த கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான மிக இளைய வீரர் என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.
பட்டியல்
டைம் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற 6 உலக விளையாட்டு நட்சத்திரங்கள்:
ஆர்க் மேனிங் - அமெரிக்கக் கல்லூரி கால்பந்து வீரர்
டைரீஸ் மேக்சி - என்பிஏ கூடைப்பந்து வீரர்
நவோமி கிர்மா - அமெரிக்க பெண்கள் கால்பந்து அணி வீராங்கனை
அலெக்ஸாண்ட்ரா ஈலா - பிலிப்பைன்ஸ் டென்னிஸ் வீராங்கனை
ஃபோலரின் பலோகன் - அமெரிக்க ஆண்கள் கால்பந்து அணி வீரர்
ஒலிவியா மைல்ஸ் - டபிள்யூஎன்பிஏ கூடைப்பந்து வீராங்கனை