Loading...
மீண்டும் வெடித்த சாண்ட்பேப்பர் கேட் சர்ச்சை: வர்ணனையாளர் பணியிலிருந்து உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் அதிரடி நீக்கம்
சாண்ட்பேப்பர் சர்ச்சையால் வர்ணனையாளர் பணியிலிருந்து உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் வெடித்த சாண்ட்பேப்பர் கேட் சர்ச்சை: வர்ணனையாளர் பணியிலிருந்து உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் அதிரடி நீக்கம்

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
03:46 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2018-ஆம் ஆண்டு கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய (Sandpapergate) விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், முன்னாள் தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை வர்ணனையாளர் பணியிலிருந்து ஃபாக்ஸ் கிரிக்கெட் (Fox Cricket) நிறுவனம் தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்தச் சர்ச்சை தொடர்பாக எழுந்துள்ள புதிய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கடும் அழுத்தத்தில் இருவரும் இருப்பதால், போட்டியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது எனவும், அடுத்த சில வாரங்களுக்கு இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படுவதாகவும் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்டீவ் கிராலி தெரிவித்துள்ளார்.

கவாஜாவின் சுயசரிதை

பான்கிராஃப்ட்டின் பகீர் குற்றச்சாட்டு

அண்மையில் வெளியான உஸ்மான் கவாஜாவின் 'சப்ர்' (Sabr) என்ற சுயசரிதைப் புத்தகத்தில், 2018-ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய திட்டம் குறித்துத் தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவரைத் தாண்டி அணியின் மற்ற வீரர்களுக்கும் தெரிந்திருந்தது எனக் குறிப்பிடப்பட்டதே இந்தப் புதிய புயலுக்குக் காரணமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, 'தி வெஸ்ட் ஆஸ்திரேலியன்' நாளிதழில் கட்டுரை எழுதிய கேமரூன் பான்கிராஃப்ட், ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காகப் பந்தின் தன்மையை மாற்றுவது குறித்து அப்போதைய பந்துவீச்சாளர்கள் குழுவுடன் (பாட் கம்மின்ஸ் உட்பட) விவாதித்ததாகப் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குற்றச்சாட்டுகளை மறுத்த பாட் கம்மின்ஸ்

கேப்டனுக்குத் துணை நிற்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா

மறுபுறம், அணியில் இருந்த அனைவருக்கும் இந்தத் திட்டம் தெரியும் என்ற குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது "முற்றிலும் அபத்தமானது" என அவர் பதிலடி கொடுத்துள்ளார். இந்தச் சர்ச்சையால் கம்மின்ஸின் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் அவருக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், கம்மின்ஸை கேப்டன் பதவியிலிருந்து நீக்கினால் அணியில் பெரும் கிளர்ச்சி வெடிக்கும் என வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT