2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி
செய்தி முன்னோட்டம்
அஜர்பைஜானின் பாகுவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25)நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் ட்ராப் போட்டியில் இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி குமாரி ஐந்தாவது இடம் பிடித்தார்.
முன்னதாக, தகுதிச் சுற்றில் 120 என்ற தேசிய சாதனை படைத்த ராஜேஸ்வரி, ஆறு பேர் போட்டியிடும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதில் 19 ஷாட்களை வெற்றிகரமாக முடித்து போட்டியில் ஐந்தாவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தாலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் மகளிர் டிராப் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும் இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார்.
India bags 7 quota in paris olympics
ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்
ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 25 மீ சென்டர்-ஃபயர் பிஸ்டல் குழுப் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது.
ராஜேந்திர பகுல், அக்ஷய் ஜெயின் மற்றும் கௌரவ் சவுத்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,718 புள்ளிகளை பெற்று ஜெர்மனி (1743) மற்றும் தென்கொரியாவுக்கு (1731) அடுத்து மூன்றாவது இடம் பிடித்தனர்.
இதற்கிடையே, சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஐந்து தங்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா இப்போது பதக்க எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், ராஜேஸ்வரியின் வெற்றியின் மூலம், 2024 ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஏழாவது கோட்டாவை பெற்றுள்ளது.