உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்; ரோஹித் ஷர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 0-3 என படுதோல்வியை சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது. இதன் மூலம், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட உள்நாட்டு டெஸ்ட் தொடரில் முதல்முறையாக ஒயிட்வாஷ் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளது. மேலும், கடந்த 24 ஆண்டுகளில் முதல்முறையாக உள்நாட்டு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 0-2 என ஒயிட்வாஷ் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்விகளை பெற்ற இந்திய கேப்டன்களை இதில் பார்க்கலாம்.
உள்நாட்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய கேப்டன்கள்
இந்த பட்டியலில் தலா இரண்டு தோல்விகளுடன் ராகுல் டிராவிட், விராட் கோலி ஐந்தாவது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி, பிஷன் சிங் பேடி ஆகியோர் தலா மூன்று தோல்விகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர். கபில்தேவ் மற்றும் முகமது அசாருதீன் தலா நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து, மூன்றாவது இடத்தில் உள்ளனர். தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மா, உள்நாட்டில் 16 டெஸ்டில் 5 தோல்விகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் 27 போட்டிகளில் 9 தோல்விகளை சந்தித்துள்ளார்.