திலக் வர்மாவை சேர்த்தது துணிச்சலான முடிவு; இந்திய அணியின் தேர்வுக்கு டாம் மூடி பாராட்டு
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி, 2023 ஆசிய கோப்பைக்கு திலக் வர்மா இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது துணிச்சலான முடிவு என்று பாராட்டினார். வளர்ந்து வரும் வீரர் திலக் வர்மாவை சேர்ப்பது ஒரு அற்புதமான முடிவு என்று கூறியதோடு, அணி நிர்வாகத்தின் தொலைநோக்கு மற்றும் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார். இடது கை பேட்டரான திலக் வர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை. இந்நிலையில், நேரடியாக பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச நிகழ்வில் நேரடியாக களமிறங்க உள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசும்போது மூடி, "இது ஒரு அற்புதமான தேர்வு என்று நான் நினைக்கிறேன். முன்பு கூறியதுபோல் அவர் ஒரு சிறந்த வளர்ந்து வரும் வீரர்." என்று கூறினார்.
டாப் ஆர்டர் அல்லது ஆறாவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்க திட்டம்
தொடர்ந்து பேசிய டாம் மூடி, "திலக் வர்மா திறமைசாலி மட்டுமல்ல, ஒரு மகத்தான குணமும் கொண்டவர். மேலும் அவர் அதை வழக்கமாகக் கொண்டுள்ளார். டாப் ஆர்டரில் இடது கை பேட்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதால், அவர் தொடக்க ஆட்டக்காரராக அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்குவார்." என்று கூறினார். முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் திலக் வர்மாவின் சமீபத்திய செயல்திறன் கவனத்தை ஈர்த்தது. ஐந்து ஆட்டங்களில் இருந்து 173 ரன்கள் குவித்து, தொடரின் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார். அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக திலக் வர்மா திணறுவது கவலையை ஏற்படுத்தினாலும், மூடி அவரது திறனை நம்புகிறார்.