ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பஞ்சாப், கேரளா புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
பஞ்சாப் விளையாட்டு அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் மற்றும் கேரள எம்பி ஷஷி தரூர் ஆகியோர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களை சேர்க்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஐசிசி மற்றும் பிசிசிஐ அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) வெளியிட்டது. இதில் 48 போட்டிகள் மொத்தம் 10 மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தொடரின் முதல் மற்றும் கடைசி போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. எனினும், இதில் பஞ்சாபின் மொஹாலி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் மைதானங்கள் சேர்க்கப்படவில்லை.
கிரிக்கெட் தொடரை சர்ச்சையாக்கும் அரசியல்வாதிகள்
கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான சசி தரூர், திருவனந்தபுரத்தின் ஸ்போர்ட்ஸ் ஹப், இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் ஸ்டேடியம் என்று பலரால் பாராட்டப்பட்டாலும், உலகக் கோப்பை 2023 போட்டிப் பட்டியலில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். "அகமதாபாத் நாட்டின் புதிய கிரிக்கெட் தலைநகராக மாறி வருகிறது. ஆனால் கேரளாவுக்கு ஓரிரு போட்டிகள் கூடவா ஒதுக்கப்படக் கூடாது?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மறுபுறம் பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் கூறுகையில், அரசியல் தலையீடு காரணமாக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நகரங்களின் பட்டியலில் இருந்து மொஹாலி நீக்கப்பட்டதாகவும், பஞ்சாப் அரசு இந்த விவகாரத்தை பிசிசிஐயிடம் எழுப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.