
ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த டாப் 5 வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
கிளென் மேக்ஸ்வெல் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு மேட்ச்-வின்னிங் இரட்டை சதத்தை அடித்ததன் மூலம் தனது முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, 292 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என பலரும் நினைத்த நிலையில், ஒரு முனையில் பாட் கம்மின்ஸ் நிலைத்து நிற்க, மறுமுனையில் தனி ஆளாக ஆப்கான் பந்துவீச்சை அடித்து நொறுக்கி கிளென் மேக்ஸ்வெல் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இது ஒருநாள் உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட மூன்றாவது இரட்டை சதமாகும்.
இது குறித்து மேலும் பார்க்கும் வகையில், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் சிறந்த தனிநபர் ஸ்கோர்களை இங்கு பார்க்கலாம்.
Martin Guptill highest run scorer in ODI World Cup
மார்ட்டின் கப்தில் - 237* வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக (2015 இல்)
2015 உலகக் கோப்பையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 237* ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கப்தில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 163 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் விளாசினார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது.
மிகவும் கடினமான இலக்கை சேஸ் செய்ய போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்களுக்கு சுருண்டு 143 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
Chris Gayle first double centurion in ODI World Cup
கிறிஸ் கெய்ல் - 215 ஜிம்பாப்வேக்கு எதிராக (2015 இல்)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் உலகப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை 2015இல் பெற்றார்.
2015 ஒருநாள் உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் 215 ரன்கள் எடுத்தார்.
இதில் 147 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களை விளாசினார்.
அந்த அணியின் மாதொரு வீரரான மார்லோஸ் சாமுவேல்ஸ் 133 ரன்கள் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 372/2 என முடித்தது.
பதிலுக்கு ஜிம்பாப்வே 44.3 ஓவர்களில் 10 விக்கெட்டுக்கு 289 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
Glenn Maxwell First Double Centurion in ODI World Cup while Chasing
கிளென் மேக்ஸ்வெல் - 201* ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (2023 இல்)
மும்பை வான்கடே மைதானத்தில் 292 இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 8.2 ஓவரில் 49/4 என்ற நிலையில் தத்தளித்தபோது கிளென் மேக்ஸ்வெல் களமிறங்கினார்.
பின்னர் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தாலும், அவர் எட்டாவது விக்கெட்டுக்கு பாட் கம்மின்ஸுடன் கூட்டணி அமைத்தார்.
மேக்ஸ்வெல் எதிர்தாக்குதல் செய்ய முடிவு செய்தாலும், கம்மின்ஸ் நிலைத்து நின்று ஒருங்கிணைத்தார். இதன் மூலம் மேக்ஸ்வெல் கடைசி வரை அவுட்டாகாமல் 201* ரன்கள் குவித்தார்.
இதில் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும்.
கிறிஸ் கெயில் மற்றும் மார்ட்டின் கப்தில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசினாலும், சேஸிங்கின்போது இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல் பெற்றார்.
Gary Kirsten 188 vs UAE in 1996
கேரி கிர்ஸ்டன் - 188* ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக (1996 இல்)
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக 1996 ஒருநாள் உலகக்கோப்பையில் கேரி கிர்ஸ்டன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 188* ரன்கள் குவித்தார்.
கேரி கிர்ஸ்டன் இந்த ஸ்கோரை 13 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்சர்களுடன் எடுத்தார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தியது.
பதிலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
கேரி கிர்ஸ்டனின் இந்த சாதனை நீண்ட காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த நிலையில், 2015இல் கிறிஸ் கெயில் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
Saurav Ganguly 183 runs against Srilanka in 1999
சவுரவ் கங்குலி - 183 இலங்கைக்கு எதிராக (1999 இல்)
சவுரவ் கங்குலி 1999 ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக தனது முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் இருவரும் 318 ரன்கள் சேர்த்தனர்.
இதில் அபாரமாக விளையாடிய சவுரவ் கங்குலி 183 ரன்கள் குவித்தார். மேலும், ராகுல் டிராவிட்டும் 145 ரன்கள் சேர்க்க இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது.
பதிலுக்கு, இலங்கை வீரர்கள் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவினர்.
எது எப்படி இருப்பினும், மற்ற வீரர்கள் அனைவரும் முதல் இன்னிங்சில் மட்டுமே அதிகபட்ச ஸ்கோரை எடுத்துள்ள நிலையில், கிளென் மேக்ஸ்வெல் சேஸிங்கில் கடும் அழுத்தத்திற்கு இடையில் இதை செய்துள்ளது வரலாற்றில் எப்போதும் நினைவுகூரப்படும்.