ஐசிசியின் மதிப்புமிக்க மகளிர் அணி : இந்திய வீராங்கனை ரிச்சா கோஷுக்கு இடம்!
மகளிர் டி20 உலகக் கோப்பை 2023க்கு பிறகு ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் இந்திய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இந்த அணியில் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியில் இருந்து அதிகபட்சமாக நான்கு வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போட்டியின் தொடர்நாயகியாக தேர்வு செய்யப்பட்ட ஆஷ்லே கார்ட்னர் அலிசா ஹீலி, டார்சி பிரவுன் மற்றும் மேகன் ஷட் ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர்-பிரண்ட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வர்ணனையாளர்கள் இயன் பிஷப், மெலனி ஜோன்ஸ் மற்றும் எபோனி ரெயின்ஃபோர்ட்-ப்ரெண்ட், பத்திரிக்கையாளர் ஃபிர்தோஸ் மூண்டா உள்ளிட்ட நிபுணர்கள் குழுவால் இந்த அணி தேர்வு செய்யப்பட்டது. icc-cricket.com இல் நடத்தப்பட்ட ரசிகர்களின் வாக்கெடுப்பும் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஐசிசி மதிப்பு மிக்க அணி : முழு வீராங்கனைகள் விபரம்
மேலே குறிப்பிட்டுள்ள வீராங்கனைகள் தவிர தென்னாப்பிரிக்காவின் டாஸ்மின் பிரிட்ஸ் மற்றும் லாரா வோல்வார்ட் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து ரிச்சா கோஷ் மிடில் ஆர்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் கரிஷ்மா ராம்ஹரக் ஆகியோர் உள்ளனர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 61 ரன்கள் உட்பட 109 ரன்கள் எடுத்த அயர்லாந்திற்கான உலகக் கோப்பையில் இளம் நட்சத்திரம் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 12வது வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். பந்து வீச்சிலும் ப்ரெண்டர்காஸ்டும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.