டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் குரூப் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம், இந்தியா டி20 உலக கோப்பை தொடருக்குள் காலடி எடுத்து வைக்கிறது. ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரை, அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்துகின்றன. குழு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும் நிலையில், சூப்பர் 8 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா விளையாடும் குரூப் போட்டி அட்டவணை
இந்தியா குரூப் போட்டிகளில் தேர்ச்சி பெரும் பட்சத்தில், அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னரும். இந்தியா இடம் பெற்றுள்ள குழுவில், அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா விளையாடும் குழு போட்டிகளுக்கான அட்டவணை பின்வருமாறு. இந்தியா vs அயர்லாந்து ஜூன் 5 (நியூயார்க்) இந்தியா v பாகிஸ்தான் ஜூன் 9 (நியூயார்க்) இந்தியா vs அமெரிக்கா ஜூன் 12 (நியூயார்க்) இந்தியா vs கனடா ஜூன் 15 (புளோரிடா)
பார்படாஸில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்க வாய்ப்பு
குழு போட்டிகளில் தேர்ச்சி அடையும் பட்சத்தில், இந்தியா ஜூன் 20ம் தேதி பார்படாஸில் தனது முதல் சூப்பர் 8 போட்டியை விளையாடும். இந்தியா விளையாடும் அனைத்து சூப்பர் 8 போட்டிகளும் மேற்கிந்திய தீவுகளில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜூன் 29ஆம் தேதி டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி பார்படாஸில் நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தோல்வியடைந்து, தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.