SlvsBAN: வங்கதேசத்திற்கு குறைவான இலக்கை நிர்ணயித்திருக்கும் இலங்கை
ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஹகிப் அல் ஹசன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இலங்கையின் சார்பில் பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே ஆகியோர் களமிறங்கினர். கருணாரத்னே 18 என்ற சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நிசங்கா 40 ரன்களைக் குவித்தார். எனினும் 66 என்ற குறைவான ஸ்ட்ரைக் ரேட்டிலேயே ஆடியிருந்தார் அவர். அதன் பின்பு களமிறங்கிய குசால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா ஆகியோர் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தனர். குசால் மெண்டிஸ் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டிலேயே ஆடியிருந்தாலும், சமரவிக்ரமா 120 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களைக் குவித்தார்.
குறைவான இலக்கை நிர்ணயித்த இலங்கை:
லோயர் ஆர்டரில் களமிறங்கிய சரித் அசலங்கா, தனஞ்செயா டி சில்வா மற்றும் இலங்கை அணியின் கேப்டனான தசுன் சனாகா யாருமே சோபிக்கவில்லை. நான்காவதாக களமிறங்கிய சமரவிக்ரமா மட்டும் இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 93 ரன்களைக் குவித்தார். வங்கதேச அணியின் சார்பில் ஹசன் மஹ்முத் மற்றும் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டத்தின் முதல் பாதியில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களைக் குவித்தது இலங்கை. 258 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவிருக்கிறது வங்கதேசம்.