அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி! தொடரை 2-0 என கைப்பற்றியது!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றது. அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் ஸ்டிர்லிங் மற்றும் கேம்பர் சதம் மூலம் 492 ரன்களை குவித்தது. அடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 704 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. நிஷான் மதுஷ்கா மற்றும் மெண்டிஸ் இரட்டை சதமடித்த நிலையில், திமுத் கருணாரத்ன மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் சதமடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அயர்லாந்து அணியில் ஹாரி டெக்டர் மட்டும் அரைசதம் அடித்த நிலையில், மற்ற வீரர்கள் சொதப்பியதால் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது.
போட்டியில் நிகழ்த்தப்பட்ட முக்கிய சாதனைகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்து தோல்வியை தழுவிய ஸ்கோராக அயர்லாந்து கிரிக்கெட் அணியின் 492 ரன்கள் மோசமான சாதனை படைத்துள்ளது. அதே நேரம் அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ஸ்கோரும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பால்பிர்னி தனது மூன்றாவது டெஸ்ட் அரைசதத்தை அடித்தபோது, அயர்லாந்தின் அதிக ரன் எடுத்தவராக ஆகியுள்ளார். மேலும் பால் ஸ்டிர்லிங் சதமடித்ததன் மூலம் அயர்லாந்து அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த இரண்டாவது வீரர் ஆனார். இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூரியா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற சாதனை படைத்து 72 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்