ஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்!
ஆசிய கோப்பை 2023 நடைபெறும் இடம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்வதால், தேவை ஏற்பட்டால் போட்டியை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கொண்டிருந்தாலும், இந்திய அரசின் அனுமதி மறுக்கப்பட்டதை காரணம் காட்டி பிசிசிஐ தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப விரும்பவில்லை. ஆசியக் கோப்பைக்காக இந்தியா அங்கு செல்லாவிட்டால், ஹைப்ரிட் மாடலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்தது. அதையும் ஏற்க மறுத்து போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றினால், அடுத்து இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தது. இருப்பினும், தளவாட சவால்கள் காரணமாக பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடல் பரிந்துரையை நிராகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்
பாகிஸ்தானின் முன்மொழிவு குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளதால் அதை கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்தால் ஆசிய கோப்பையை குறுகிய அறிவிப்பில் நடத்த தாங்கள் தயாராகவே உள்ளோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை பொறுத்தவரை பிசிசிஐ உடன் இருப்போம் எனத் தெரிவித்துள்ளனர். முன்னதாக 2022 ஆசிய கோப்பை இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பொருளாதார அவசர நிலை காரணமாக கடைசி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்