Sports RoundUp: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள்; தொடங்கின உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்; டாப் விளையாட்டுச் செய்திகள்!
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது இந்தியா. நேற்றைய முன்தினம் வரை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 12 பதக்கங்களைக் பெற்றிருந்தது நிலையில், நேற்று மட்டும் 2 தங்கம் மற்றும் 3 வெள்ளி என ஐந்து பதக்கங்களைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. பாலக், அஷ்வரி டோமர் மற்றும் ஈஷா சிங் ஆகியோர் துப்பாக்கிச் சுடுதல் தனிநபர் பிரிவுகளில் நேற்று 3 பதக்கங்களை வென்றனர். மேலும், குழுவாக ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தலா ஒரு பதக்கத்தைக் கைப்பற்றியது. நேற்று பெண்கள் அணியானது 10மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும், ஆண்கள் அணியானது 50மீ ரைபிள் 3P பிரிவிலும் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மேலும் 3 பதக்கங்கள்:
துப்பாக்கிச் சுடுதலைத் தவிர்த்து நேற்று, டென்னிஸ், ஸ்குவாஷ் மற்றும் தடகளம் ஆகிய விளையாட்டுக்களிலும் பதக்கங்களை வென்றது இந்தியா. டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகெத் மைனெனி இணையானது ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அதே போல், ஜோஷ்னா சின்னப்பா, தான்வி கண்ணா மற்றும் அனாகத் சின்ஹா ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் ஸ்குவாஷ் அணியானது வெண்கலப் பதக்கத்தை வென்றது. இறுதியாக, இந்திய வீராங்கணை கிரண் பலியா குண்டு எறிதலில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வெண்றார். இந்தப் பதக்கத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்திலும் பதக்க வேட்டையைத் துவக்குகிறது இந்தியா.
உலக கோப்பைக்கான பயிற்சிப் போட்டிகள் துவக்கம்:
ஒருநாள் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கான பயிற்சிப் போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மூன்று பயிற்சிப் போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றம் ஆஃப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது பயிற்சிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் பயிற்சிப் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது வங்கதேசம். அதே போல், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது பயிற்சிப் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. மேலும், நீண்ட இடைவெளிக்குப் பின்பு நியூசிலாந்து அணியின் கேம் வில்லியம்சன் இந்தப் போட்டியில் விளையாடினார்.
2024 ஒலிம்பிக்ஸ் தொடருக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கணை:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டின் 40-45 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வரும் இந்திய வீராங்கணை நிகட் ஸரின், நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹனான் நாஸரை வெற்றி கொண்டார். இந்த வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கத்தையும் உறுதி செய்திருக்கிறார் அவர். இந்தப் போட்டியானது வெறும் 53 நொடிகள் மட்டுமே நீடித்தது. 53 நொடிகளில் தன்னுடைய எதிராளியை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் நிகட் ஸரின். மேலும், இந்த வெற்றியுடன் 2024ல் பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் தொடருக்கும் தகுதி பெற்றிருக்கிறார் அவர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியல்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போது வரை 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிகது இந்தியா. 105 தங்கம், 63 வெள்ளி மற்றும் 32 வெண்கலப் பதக்கங்கள் என 200 பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது சீனா. அதனைத் தொடர்ந்து 27 தங்கப் பதக்கங்களுடன் மொத்தமாக 99 பதக்கங்களை வென்று இரண்டாமிடத்தில் ஜப்பானும், 26 தங்கப் பதக்கங்களுடன் மொத்தமாக 102 பதக்கங்களை வென்று மூன்றாமிடத்தில் தென் கொரியாவும் இடம்பிடித்திருக்கின்றன. 2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்றது இந்திய. இம்முறை அதனை விடக் கூடுதலான பதக்கங்களை வெல்லுமா?