Sports Round Up : வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய விளையாட்டுச் செய்திகள்
சீனாவின் ஹாங்சோ நகரில் சனிக்கிழமை (அக்.7) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தனிநபர் காம்பவுண்ட் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. இந்தியா சார்பில் இந்த போட்டியில் பங்கேற்ற ஜோதி சுரேகா வென்னம் 149-145 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியாவின் சோ சேவோனை தோற்கடித்து தங்கம் வென்றார். அவர் ஏற்கனவே மகளிர் மற்றும் கலப்பு குழு பிரிவுகளிலும் பட்டங்களை வென்றிருந்த நிலையில், இது அவருக்கு மூன்றாவது பதக்கமாகும். வில்வித்தையில் இது இந்தியாவின் ஏழாவது பதக்கமாகும். ஒட்டுமொத்தமாக 23 தங்கம், 34 வெள்ளி மற்றும் 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களை தற்போதுவரை இந்தியா வென்றுள்ளது. மேலும், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல போட்டிகளிலும் இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து பந்துவீச்சில் திணறினாலும் போராடி 286 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் தலா 68 ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்தின் ஆல் ரவுண்டர் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்த நெதர்லாந்து 205 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது. நெதர்லாந்து இந்த போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், பந்துவீச்சில் நம்பர் 1 அணியான பாகிஸ்தானை திணறடித்தது கவனம் ஈர்த்துள்ளது.
தங்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிப்பு
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2023ல் ஆடவர் இந்திய ஹாக்கி அணி ஜப்பானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியாவுக்கு 22வது தங்கத்தை பெற்றுக் கொடுத்தது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் இந்திய அணிக்கு இது ஒட்டுமொத்தமாக நான்காவது தங்கமாகும். மேலும் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு இது இரண்டாவது தங்கமாகும். இந்த வெற்றியின் மூலம், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில், அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் மற்றும் துணை ஊழியர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் பரிசு வழங்குவதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
வில்வித்தை ஆடவர் தனிநபர் இறுதிப்போட்டியில் தங்கம்-வெள்ளியை வென்ற இந்தியர்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் இந்தியாவின் ஓஜாஸ் டியோடேல் மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் ஆடவர் தனி நபர் காம்பவுண்ட் வில்வித்தை இறுதிப் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளியை வென்று அசத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இது இந்தியாவுக்கு மற்றொரு தங்கம்-வெள்ளி வென்ற போட்டியாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் பெற்ற பதக்கங்கள், இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கையை 99 ஆக உயர்த்தியுள்ளது. மேலும், இதில் வில்வித்தையில் மட்டும் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தமாக 9 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாறு படைத்த இந்திய வில்வித்தை ரிகர்வ் அணி
இந்திய ஆடவர் ரிகர்வ் வில்வித்தை அணி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்று வரலாறு படைத்தது. அதானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா மற்றும் துஷார் ஷெல்கே ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில், தென் கொரியாவின் தற்போதைய உலக சாம்பியனான லீ வூ-சியோக், ஓ ஜின்-ஹைக் மற்றும் கிம் ஜெ-டியோக் ஆகியோரிடம் 1-5 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி வெள்ளியோடு திரும்பினர். எனினும், ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் ரிகர்வ் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்திய அணி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். இதற்கு முன்பாக 2006 மற்றும் 2010 ஆகிய இரண்டு முறையும் இந்தியா அதிகபட்சமாக வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.