Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய வரலாறு; ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் தொடக்கம்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்திய விளையாட்டுக்கு ஒரு முக்கியமான வரலாற்று நாளாக ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இன் 11வது நாள் (அக்டோபர் 4) அமைந்துள்ளது. முன்னதாக, 69 பதக்கங்களுடன் 11வது நாளை தொடங்கிய இந்திய விளையாட்டு வீரர்கள், இந்த நாளில் கூடுதலாக 12 பதக்கங்களை கைப்பற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்களை இந்தியா பெற்ற சீசனாக இதை மாற்றியுள்ளனர். இதற்கு முன்னர் 2018 ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டியில் 70 பதக்கங்களை வென்றதே உச்சபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2018இல் 16 தங்கங்களை கைப்பற்றிய நிலையில், இந்த முறை தற்போதுவரை 18 தங்கங்களுடன் அந்த சாதனையையும் முறியடித்துள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை கேப்டன்கள் தினத்தில் பங்கேற்ற 10 அணிகளின் கேப்டன்கள்
ஐசிசி ஆடவர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான கேப்டன்கள் தினம் சிறப்பாக நடந்து முடிந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதற்காக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் புதன்கிழமை (அக்டோபர் 4) ஒன்று திரண்டனர். அங்கு 10 அணி கேப்டன்களும் ஒன்றாக இருக்கும் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை பிரபல புகைப்படக் கலைஞர் ரோஹன் ஷ்ரேஸ்தா எடுத்தார். இதற்கிடையே, சங்கர் மஹாதேவன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சியுடன் ஒருநாள் உலகக்கோப்பைக்கான பிரமாண்ட தொடக்க விழாவை புதன்கிழமை பிசிசிஐ நடத்துவதாக முன்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அப்படி எந்தவொரு நிகழ்வையும் பிசிசிஐ நடத்தாதது ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. தனது பிரிந்த மனைவி ஆயிஷா முகர்ஜியால் கொடுமை மற்றும் மன வேதனைக்கு ஆளானதாக கூறி ஷிகர் தவான் விவாகரத்து கோரி இருந்தார். டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரீஷ்குமார், ஷிகர் தவானின் விவாகரத்துக்கு ஒப்புதல் அளித்தார். விவாகரத்து மனுவில் மனைவி மீது தவான் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிபதி ஹரிஷ்குமார் ஏற்றுக்கொண்டு இந்த உத்தரவை வழங்கியுள்ளார். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளை கொண்டுள்ள ஆயிஷா முகர்ஜி தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, 2012இல் ஷிகர் தவானை திருமணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
6 நாடுகள், 3 கண்டங்கள்; 2030 பிபா உலகக்கோப்பையை நடத்தும் நாடுகள் தேர்வு
மொராக்கோ, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் 2030 கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் நாடுகளாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் (பிபா) அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகியவை போட்டியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் தொடக்க ஆட்டங்களை நடத்தும் என்று பிபா தெரிவித்துள்ளது. மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கூட்டாக இந்த போட்டியை நடத்த விண்ணப்பித்திருந்த நிலையில், வேறு எந்த நாடுகளும் விண்ணப்பிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிபாவின் முடிவின் மூலம், கால்பந்து உலகக்கோப்பை மூன்று கண்டங்கள் மற்றும் ஆறு நாடுகளில் முதல்முறையாக ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கத்திற்கு காரணம் இஸ்லாம்: மேத்யூ ஹெய்டன்
பாகிஸ்தானின் கிரிக்கெட் கலாச்சாரத்தில் இஸ்லாத்தின் தாக்கம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் கூறிய கருத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை கவுகாத்தியில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உலகக் கோப்பை 2023 பயிற்சி ஆட்டத்தின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜாவுடன் பேசும்போது அவர், பாகிஸ்தான் வீரர்களின் ஒழுக்கத்திற்கு காரணம் இஸ்லாமை சுற்றி அவர்கள் இருப்பதுதான் எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணியின் வழிகாட்டியாக இருந்த போது, பாபர் அசாம் தலைமையிலான அணியுடன் ஹெய்டன் நெருக்கமாக பணியாற்றியதை வைத்து இதை தெரிவித்துள்ளார்.