Sports Round Up : நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா; ஐசிசி தரவரிசையில் ஷாஹீன் அப்ரிடி முதலிடம்; மேலும் பல முக்கிய செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.1) நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா குயின்டன் டி காக், ராஸ்ஸி வான் டெர் டுசென் சதங்கள் மற்றும் டேவிட் மில்லரின் அரைசதம் மூலம் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், கிளென் பிலிப்ஸ் மட்டும் கடைசி வரை போராடி 60 ரன்கள் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், 167 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறப்பு
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கரின் 50 வது பிறந்தநாளின்போது, இந்த சிலையை திறக்க தொடக்கத்தில் திட்டமிடப்பட்டது. இருப்பினும், அப்போது பணிகள் முழுமையாக முடிவடையாததால் சிலைத் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை இந்தியா மற்றும் இலங்கை மோதும் போட்டிக்கு முன்னதாக திறக்கப்பட்டுள்ளது. டெண்டுல்கரின் புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கான பங்களிப்பிற்கு அஞ்சலி செலுத்தும் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை அகமதுநகரைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர்-சிற்பி பிரமோத் காம்ப்ளே வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு எதிரான போட்டியிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்; ரோஹித் ஷர்மா தகவல்
வியாழக்கிழமை நடக்க உள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது கணுக்கால் காயத்தில் இருந்து தொடர்ந்து முன்னேறி வந்தாலும், அவர் இன்னும் விளையாட தயாராக இல்லை என்று கூறினார். மேலும், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா, இப்போதைக்கு இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் இல்லை என்பதை மட்டுமே கூற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய ஷாஹீன் அப்ரிடி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில், அவர் ஏழு இடங்கள் முன்னேறி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான அவரது அணி வெற்றி பெற்ற ஒரு நாளுக்குப் பிறகு அப்ரிடி முதலிடத்திற்கு வந்துள்ளார். அதில் அவர் 23 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த போட்டியில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100வது விக்கெட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார்.
பிளாக் மார்க்கெட்டில் டிக்கெட் விற்பதாக புகார்; பிசிசிஐ மீது எப்ஐஆர் பதிவு
ஞாயிற்றுக்கிழமை (நவ.05) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் பிளாக் மார்க்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் நடப்பதாக பிசிசிஐ, புக்மைஷோ மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு எதிராக ரசிகர் ஒருவர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். புகாரில், ஆரம்பத்தில் பொது வெளியீட்டிற்காக திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான டிக்கெட்டுகளை பிசிசிஐ, பெங்கால் கிரிக்கெட் சங்கம் மற்றும் புக்மைஷோ மூலம் குவித்து, தனிப்பட்ட லாபத்திற்காக பிளாக் மார்க்கெட்டில் விற்கப்பட்டதாக ரசிகர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கொல்கத்தா காவல்துறை பெங்கால் கிரிக்கெட் சங்கம் மற்றும் புக்மைஷோ தளத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.