Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஆடவர் இந்திய ஹாக்கி அணி வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிக்காக இம்மாத இறுதியில் தென்னாப்பிரிக்கா செல்கிறது. ஜனவரி 14 முதல் 15 நாட்களுக்கு கேப்டவுனில் பயிற்சியில் ஈடுபடும் இந்திய ஆடவர் அணி, இந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது . மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 26 விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒன்பது பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கான பயிற்சிக்கான நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.1.30 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது.
ஜாக்ரெப் ஓபனில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட இந்திய மல்யுத்த அணி அறிவிப்பு
குரோஷியாவில் நடைபெறவிருக்கும் ஜாக்ரெப் ஓபனில் பங்கேற்பதற்காக 13 பேர் கொண்ட மல்யுத்த வீரர்கள் குழுவை இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் தற்காலிக குழு செவ்வாயன்று (ஜனவரி 2) அறிவித்தது. குரோஷிய தலைநகரில் நடைபெற உள்ள இந்த முதல் உலக தரவரிசைப் போட்டி ஜனவரி 10 முதல் 14 வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, சஞ்சய் சிங் தலைமையிலான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகத்தை விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்த பின்னர், இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் இந்தியா தோல்வி
மும்பை வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற மூன்றாவது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் 190 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. ஃபோப் லிட்ச்ஃபீல்ட்119 ரன்களும், அலீசா ஹீலி 83 ரன்களும் எடுத்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 0-3 என ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஃபோப் லிட்ச்ஃபீல்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய நான்காவது இந்திய வீராங்கனை ஆனார். இதற்கு முன்னதாக, நூஷின் அல் கதீர், நீது டேவிட் மற்றும் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உஸ்மான் கவாஜாவின் தைரியத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தி ஐசிசிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த உஸ்மான் கவாஜாவின் தைரியத்தை ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பாராட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சமத்துவம் மற்றும் சுதந்திரம், குறிப்பாக ஒரு புறா லோகோ மற்றும் ஆலிவ் கிளையை ஷூவில் பதித்து விளையாட திட்டமிட்டிருந்தார். எனினும், இதற்கு தடை விதித்த ஐசிசி, வீரர்கள் தங்கள் சீருடையில் தனிப்பட்ட செய்திகளைக் காட்டுவதைத் தடைசெய்யும் சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையில் அதற்கு தடை விதித்தது. எனினும், சிட்னி டெஸ்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்களிடையே உரையாற்றும் போது கவாஜாவின் செயலை பிரதமர் பாராட்டினார்.