Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
விஜய் ஹசாரே கோப்பையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாகலாந்து அணி தமிழக அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 69 ரன்களுக்கு சுருண்டது. தமிழக அணியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட்டிங் செய்த தமிழகம் விக்கெட் இழப்பிற்கு 7.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. விரிவாக படிக்க
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா
எஃப்ஐஎச் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை 2023 தொடரின் தொடக்க ஆட்டத்தின் இந்திய ஹாக்கி அணி தென்கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய ஆரைஜீத் சிங் ஹண்டால் போட்டியின் 11, 16 மற்றும் 41வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல்களை பதிவு செய்தார். மேலும், அமந்தீப் இந்தியாவுக்காக மற்றுமொரு கோல் அடித்த நிலையில், இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. இதையடுத்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்ள உள்ளது. இந்தியா, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய அணிகள் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க
கோல்டன் பாய் விருதை வென்று ரியல் மாட்ரிட் வீரர் சாதனை
20 வயதான ரியல் மாட்ரிட் அணியின் வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் இந்த ஆண்டுக்கான கோல்டன் பாய் விருதை வென்றுள்ளார். இதன் மூலம் கோல்டன் பாய் விருதை வெல்லும் முதல் ரியல் மாட்ரிட் வீரர் என்ற சாதனையை ஜூட் பெல்லிங்ஹாம் பெற்றுள்ளார். கோல்டன் பாய் விருது ஐரோப்பிய கிளப்பில் விளையாடும் 21 வயதுக்குட்பட்ட சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, நடப்பு சீசனில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் ஜூட் பெல்லிங்ஹாம்15 கோல்களை அடித்து முன்னணியில் உள்ளார். ரியல் மாட்ரிட் அணியை பொறுத்தவரை, லா லிகா தொடரில் 15 ஆட்டங்களில் 12ல் வெற்றி பெற்று 38 புள்ளிகளுடன் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது. விரிவாக படிக்க
புரோ கபடி லீக் : தொடர்ந்து மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது குஜராத் ஜெயன்ட்ஸ்
செவ்வாயன்று அகமதாபாத்தில் டிரான்ஸ்ஸ்டேடியாவின் இகேஏ அரங்கில் நடைபெற்ற புரோ கபடி லீக் பத்தாவது சீசன் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. யு மும்பா அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் ஜெயன்ட்ஸ் ஆரம்பத்தில் திணறினாலும், சோனு களத்திற்கு வந்த பின் ஆட்டத்தின் போக்கு மாறியது. முதல் பாதி முடிவில் யு மும்பா யு மும்பா 12-10 என முன்னிலை பெற்றது. இதனால் இரண்டாவது பாதி ஆட்டமும் எளிதாக இருக்கும் என நினைத்த நிலையில், சோனு அதிரடியை ஆரம்பித்தார். இதன்மூலம் குஜராத்தின் புள்ளிகள் சரசரவென உயர்ந்து, இறுதியில் குஜராத் அணி 39-37 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. சோனு 11 ரெய்டு புள்ளிகளை பெற்றார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தேதி டிசம்பர் 8 அல்லது அதற்கு பிறகு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வீரர்கள் முன்வைத்த நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை மாற்றி அமைக்க இந்திய முடிவு செய்தது. இதையடுத்து பலமுறை தேர்தல் அறிவிக்கப்பட்டு அது தள்ளிப்போன நிலையில், தேர்தலுக்கு உள்ள தடைகளை தற்போது உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும், டிசம்பர் 8ஆம் தேதிக்குள் தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இதனால் டிசம்பர் 8 அன்றோ அல்லது அதற்கு பிறகோ தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. விரிவாக படிக்க