விஜய் ஹசாரே கோப்பை 2023 : காலிறுதிக்கு தகுதி பெற்றது தமிழ்நாடு கிரிக்கெட் அணி
செவ்வாய்க்கிழமை (டிச.5) நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை 2023 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி நாகலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய நாகலாந்து அணியில் ஜோசுவா ஒசுகம் 13 ரன்களும், சுமித் குமார் 20 ரன்களும் எடுத்தனர். இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்களை எடுத்த நிலையில், நாகலாந்து 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுக்களையும் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
8 ஓவர்களுக்குள் இலக்கை எட்டிய தமிழ்நாடு
70 ரன்கள் எனும் எளிய இலக்குடன் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் கிஷோர் மற்றும் நாராயண் ஜெகதீசன் களமிறங்கினர். இதில் சாய் கிஷோர் 37 ரன்களும், ஜெகதீசன் 30 ரன்களும் எடுத்து 7.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதன் மூலம் லீக் சுற்று முடிவில் தமிழ்நாடு அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 20 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும், இதன் மூலம் தமிழ்நாடு கிரிக்கெட் அணி டிசம்பர் 11ஆம் தேதி நடக்க உள்ள காலிறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.