Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
மல்யுத்த வீரர்களுக்கான சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெய்ப்பூரில் பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிகக் குழு சனிக்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்துள்ளது. சீனியர் ஃப்ரீ ஸ்டைல், கிரேகோ ரோமன் மற்றும் மகளிர் பிரிவில் உயர்மட்ட விருதுகளுக்கான போட்டிகள் நடத்தப்படும் என்று பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான குழு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள கணபதி நகரில் உள்ள ரயில்வே ஸ்டேடியத்தில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) இந்தப் போட்டியை நடத்துகிறது.
இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது. முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 63 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 50 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் ரிச்சா கோஷ் 96 ரன்கள் எடுத்தாலும், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 0-2 என இழந்துள்ளது.
ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்கு; புதிய விதிகளுக்கு ஃபிஃபா தற்காலிக தடை
சில புதிய விதிகளை அமல்படுத்துவதற்கு எதிரான தடைகளைத் தொடர்ந்து ஐரோப்பிய நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் வரை ஃபிஃபா அதன் புதிய முகவர் விதிமுறைகளை உலகளவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. ஃபிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது. முகவர்கள் தங்கள் பரிமாற்ற கமிஷன்களை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளைத் தடுப்பதற்கும், உரிமத்தைப் பெறுவதற்கு முகவர்கள் தேர்ச்சி பெற வேண்டிய தேர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கும் எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஃபிஃபாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளில் ஃபிஃபாவுக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஃபிஃபா தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா : ஷர்துல் தாக்கூர் நலமாக உள்ளார் என தகவல்
தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய முகாமில் இருந்து கிடைத்த தகவலின்படி ஷர்துல் தாக்கூர் தற்போது நலமாக உள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக, சனிக்கிழமையன்று செஞ்சூரியனில் நடந்த வலைப்பயிற்சியின்போது, ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்திய அணியின் மருத்துவக் குழு அவரை பரிசோதித்து எந்த பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
இலங்கை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமனம்
ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு தசுன் ஷனக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக குசால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், இலங்கை டி20 அணிக்கு கேப்டனாக வனிந்து ஹசரங்க நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளுக்கும் துணை கேப்டனாக சரித் அசலங்க பொறுப்பேற்க உள்ளார். ஜனவரியில் உள்நாட்டில் தொடங்க உள்ள ஜிம்பாப்வே தொடரில் இருந்து இது அமலுக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் வாரிய சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.