Sports Round UP: வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 23வது போட்டியில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்ப பவுமாவுக்கு பதிலாக அந்த அணியின் எய்டன் மார்க்ரம் நேற்று அணியை வழிநடத்தினார். நேற்றைய போட்டிக்கான டாஸை வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. குவிண்டன் டி காக்கின் 174 ரன்களுடன் முதல் இன்னிங்ஸ் முடிவில் 382 ரன்களைக் குவித்தது தென்னாப்பிரிக்க அணி. பவுலிங்கைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பியது வங்கதேசம். வங்கதேச அணியில் மஹ்மதுல்லா மட்டும் சதம் கடக்க மற்ற பேட்டர்கள் யாருமே சோபிக்காமல், 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது வங்கதேசம்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் நாள்: பதக்க வேட்டையில் இந்தியா
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் சீனாவின் ஹாங்சௌவில் நேற்று முன்தினம் (அக்டோபர் 23) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இரண்டாவது நாளான நேற்று மூன்று தங்கம், ஆறு வெள்ளி மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 17 பதக்கங்களை வென்றிருக்கின்றனர் இந்திய அணி வீரர்கள். படகோட்டுதல், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் பல்வேறு தடகளப் போட்டிகளில் இந்தப் பதக்கங்களை வென்றிருக்கின்றனர் இந்திய வீரர்கள். பாரா படகோட்டுதல் போட்டியில் இந்தியா வீராங்கணை பிராச்சி யாதவ், ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் F54/55/56 பிரிவில் இந்தியா வீரர் நீரஜ் யாதவ் மற்றும் ஆண்களுக்கான 5000மீ ஓட்டத்தின் T13 பிரிவில் மகாணஹல்லி சங்கரப்பா சரத் ஆகிய வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியிருக்கின்றனர்.
பிரெஞ்சு ஓபன் 2023 பாட்மின்டன் தொடரில் இந்தியா:
பிரெஞ்சு ஓபன் 2023 பாட்மின்டன் தொடரானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவைத் தவிர மற்ற அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். இத்தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுப் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட பி.வி.சிந்து மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட உலகின் நம்பர் 1 இணையான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றம் சிராக் ஷெட்டி இணை ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட ருதுபர்னா பாண்டா மற்றும் ஸ்வேதாபர்னா பாண்டா இணையானது முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறது.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியல்:
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது கடந்த அக்டோபர் 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கப் பதக்கங்கள் உட்பட 17 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது இந்தியா. இரண்டாவது நாளும் இந்தியா 17 பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 34 பதக்கங்களை வென்றிருக்கும் நிலையில், தற்போது பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. 165 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 47 பதக்கங்களுடன் ஈரான் இரண்டாவது இடத்திலும், 45 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன. 38 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் நான்காவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து இந்தியா ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றிருக்கிறது.
இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் நெதர்லாந்து:
உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 24வது போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது நெதர்லாந்து அணி. இது வரை தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று, மற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது நெதர்லாந்து. பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளிடம் நெதர்லாந்து அணி தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியை மட்டும் வெற்றி கொண்டிருக்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலிய அணியோ இது வரை இந்த உலக கோப்பைத் தொடரில் தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் அடைந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியானது தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவிம் தோல்வியடைந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் வெற்றியும் பெற்றிருக்கிறது.