Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
நடைபெற்று முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளை வைத்து 11 பேர் கொண்ட Team of the Tournament பட்டியலை வெளியிட்டிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி. இந்தப் பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த ஆறு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா, பேட்டர்களான விராட் கோலி, கே.எல்.ராகுல், ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சாளர்களானத முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரது பெயர்கள் ஐசிசியின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இவர்களைத் தவிர, தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக், நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சல், இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸாம்பா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரது பெயர்ளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
ஃபெடரரின் சாதனையை முறியடித்த ஜோகோவிச்:
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ATP டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், இத்தாலியைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னரைத் தோற்கடித்து தனது ஏழாவது ATP தொடரை வென்றிருக்கிறார் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச். முன்னதாக ஆறு ATP தொடர்களை வென்று ஓய்வு பெற்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்திருந்த ஜோகோவிச், இந்த ஏழாவது வெற்றியின் மூலம் அவரை பின்தள்ளியிருக்கிறார். இந்த ஏழாவது ATP தொடர் வெற்றியுடன் டென்னிஸ் விளையாட்டில், கிராண்டு ஸ்லாம்கள், ATP தொடர்கள், ATP மாஸ்டர்ஸ் 1000 தொடர்கள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட முக்கியமான டென்னிஸ் தொடர்களில் தனது 71வது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் நோவாக் ஜோகோவிச்.
விமர்சனத்துக்கு ஆளான ஆஸ்திரேலிய வீரர்:
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. அதனைத் தொடர்ந்து நேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தங்களில் வலம் வந்தன. அவற்றுள் ஒரு புகைப்படம் ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் வெற்றி பெற்ற உலகக்கோப்பையின் மீது கால் வைத்தபடி அமர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தன்னுடைய இன்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படமானது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு:
உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து வரும் வியாழன் (நவம்பர் 23) முதல் இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி. அதனைத் தொடர்ந்து டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. தற்போது இந்த டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அஃப்ரிடி உள்ளிட்ட முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாகிஸ்தான் அணியின் கேப்டன்சியில் இருந்து பாபர் அசாம் விலகியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடரில் அந்த அணியின் ஷான் மசூத் பாகிஸ்தான் அணியை வழிநடத்தவிருக்கிறார்.
பயிற்சியாளராகத் தொடரவிருக்கும் ராகுல் டிராவிட்?
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்திய பயிற்சியாளர் பதவியை இத்துடன் முடித்துக் கொள்ளவிருக்கறார் அல்லது தொடர்ந்து இந்திய பயிற்சியாளராகத் தொடரவிருக்கிறார என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, 'இன்னும் அது குறித்து சிந்திக்கவில்லை' எனப் பதிலளித்திருக்கிறார் அவர். நடைபெற்று முடிவடைந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும், கோப்பையை வெல்வது குறித்த சிந்தனை மட்டுமே இருந்ததாகவும், அதனைத் தவிர வேறு எது குறித்தும் சிந்திக்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். பிசிசிஐ வட்டாரத்திலும் இன்னும் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் எதுவும் எழவில்லை என்றே தகவல் வெளியாகியிருக்கிறது.