Sports Round Up: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று 7 பதக்கங்களை வென்ற இந்தியா மற்றும் முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தியிருக்கின்றனர் இந்திய வீராங்கணைகள். அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகிய இருவரும் இந்தியாவின் சார்பில் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். அதேபோல், 3000மீ ஸ்பீடு ஸ்கேட்டிங் ரிலே போட்டியிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் இரண்டிலுமே வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா. ஆண்கள் பிரிவில் ஆர்யன் பால், ஆனந்த் குமார், சித்தாந்த் மற்று்ம விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டு பதக்கம் வென்ற நிலையில், பெண்கள் பிரிவில் சஞ்சனா அதுலா, கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரல் சாது, ஆர்த்தி ராஜ் கஸ்தூரி ஆகியோர் போட்டியிட்டு பதக்கத்தை தட்டிச் சென்றிருக்கின்றனர்.
தடகள விளையாட்டுக்களில் இந்தியா:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள விளையாட்டுக்களில் நேற்று மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா. இது வரை தடகள விளையாட்டுக்களில் இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகின்றனர். தடகள விளையாட்டுக்களில் பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பரூல் சௌத்ரி வெள்ளிப் பதக்கத்தையும், ப்ரீத்தி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியிருக்கின்றனர். அதேபோல், பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் அன்சி சோஜன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார். மற்றொரு தடகள விளையாட்டான கலப்பு 4X400மீ ரிலே போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கின்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் முகமது அஜ்மல், வித்யா ரமேஷ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் போட்டியிட்டனர்.
நேற்றைய உலக கோப்பை பயிற்சிப் போட்டிகள்:
நேற்று வங்கதேசம் - இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு போட்டிகளிலுமே தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், இரண்டிலுமே DLS முறைப்படியே ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் இரண்டு முறை மழை குறுக்கிட்டதைத் தொடர்ந்து மறுசீரமைப்பு செய்யப்பட்ட இலக்கை விரைவாக எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து. அதேபோல் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியில் நியூசிலாந்து 50 ஓவர்கள் ஆட, மழை குறுக்கிட்டதால் DLS முறைப்படி குறைக்கப்பட்ட 219 என்ற இலக்கை 37 ஓவர்களில் எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறது தென்னாப்பிரிக்கா.
சக இந்திய வீராங்கணைக்கு எதிராக குரல் கொடுத்த ஸ்வப்னா பர்மன்:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கணை நந்தினி அகசரா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதே விளையாட்டில் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மற்றொரு இந்திய வீராங்கணை ஸ்வப்னா பர்மன் நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, நந்தினி அகசரா திருநங்கை எனவும் வலிமையான திருநங்கைப் பெண்ணிடம் தன்னுடைய பதக்கத்தை இழந்திருப்பதாகவும் தெரிவித்து, அவருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார் ஸ்வப்னா பர்மன். இதற்கு முன்னரும் பலமுறை நந்தினி அகசராவுக்கு எதிராகத் தான் குரல் கொடுத்திருப்பதாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெற்றிருந்தது தனக்கு ஆச்சிரியமளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.
அரையிறுதிச் சுற்றுகளுக்கு முன்னேறிய இந்திய அணி:
பதக்கங்களைத் தவிர பல்வேறு விளையாட்டுகளில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியிருக்கிறது இந்திய அணி. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கியில் பூல் A பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, நேற்று வங்கதேசத்திற்கு எதிராக தங்களுடைய இறுதி குழுச்சுற்று விளையாட்டில் விளையாடி, 12-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழத்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. அதேபோல் மற்றொரு விளையாட்டான பிரிட்ஜில் (Bridge), ரவுண்டு ராபின் சுற்றில் இந்தியாவின் பெண்கள் மற்றும் கலப்பு அணிகள் வெளியேற, அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெண்றிருக்கிறது ஆண்கள் அணி. தற்போது வரை இந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 தங்கம், 24 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என 60 பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்தில் நீடிக்கிறது இந்தியா.