Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர முடிவு செய்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பித் தருகிறேன் எனக் கூறி ஒரு அறிக்கையையும் வெளியிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கிடையே, 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், சஞ்சய் தேர்விற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது சாக்ஷி மாலிக், பஜ்ரங் மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் எதிர்ப்பின் அடையாளமாக விளையாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
விளையாட்டு வீரர்கள் மீதான ஆன்லைன் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
இந்த ஆண்டு புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மீது இனவெறி அல்லது பாலியல் ரீதியான ஆன்லைன் துஷ்பிரயோகங்கள் நிகழ்த்தப்பட்டதாக உலக தடகள அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 18-28இல் நடந்த நிகழ்வில் பங்கேற்ற 1,344 விளையாட்டு வீரர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான சுமார் 4,50,000 பதிவுகள் மற்றும் கருத்துகளைப் பகுப்பாய்வு செய்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, 2022 ஆம் ஆண்டு ஓரிகானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இனவெறி துஷ்பிரயோகம் இந்த ஆண்டு 14% அதிகரித்துள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
2024 உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா பங்கேற்காது என அறிவிப்பு
ஜனவரி 24 முதல் கெய்ரோவில் நடைபெறும் 2024 சீஸனின் முதல் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பையில் இந்தியா போட்டியிடாது என தேசிய துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த தொடரில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இரண்டு தகுதி வாய்ப்புகளை பெறுவதற்கான நிகழ்வுகளும் இருந்தாலும், வீரர்களுக்கு சிறிது ஓய்வு கொடுக்க கூட்டமைப்பு விரும்புகிறது. இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் (NRAI) பொதுச்செயலாளர் சுல்தான் சிங் கூறுகையில், "பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல் குழு மற்றும் அனைவராலும் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. அதன் பிறகே விலகும் முடிவு எடுக்கப்பட்டது." என்றார். கெய்ரோ உலக கோப்பையில் பிஸ்டல், ரைபிள் மற்றும் ஷாட்கன் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவசரமாக நாடு திரும்பிய விராட் கோலி; ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்; பிசிசிஐயின் முக்கிய அறிவிப்புகள்
குடும்ப அவசரநிலை காரணமாக தென்னாப்பிரிக்கா சென்ற விராட் கோலி அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். ஆனால் அடுத்த வாரம் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மற்றொரு இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த வார தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, கேட்ச் பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் அறிவிப்பு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இதன் மூலம், முன்னாள் டெஸ்ட் கேப்டனான டீன் எல்கர், இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் தனது சர்வதேச வாழ்க்கையை முடித்துக் கொள்வார். 36 வயதான அவர் தனது 12 வருட தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் தென்னாப்பிரிக்கா அணிக்காக 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதோடு, எட்டு ஒருநாள் போட்டிகளிளிலும் அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், 2012 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து 37.28 சராசரியுடன் டெஸ்டில் 5,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.