Sports Round Up: நெதர்லாந்தை வென்ற நியூசிலாந்து; ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்!
நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில், நேற்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்டது நியூசிலாந்து அணி. முதல் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியிலும் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தத் தொடர்ந்து தொடர்ந்து தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ததோடு, நல்ல ரன்ரேட்டையும் தக்க வைத்திருக்கிறது நியூசிலாந்து. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பேட்டர்கள், நெதர்லாந்து பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ரன்களைக் குவித்தனர். இரண்டாவதாக ஆடிய நெதர்லாந்தால் நியூசலாந்தின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியவில்லை. 46.3 ஓவர்களில் 223 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது நெதர்லாந்து.
அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடம்:
இதற்கு முன்னர் சச்சின் டென்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் குவித்த 85 ரன்களோடு சச்சினின் மற்றொரு சாதனையையும் முறியடித்திருக்கிறார் அவர். குறைந்த ஓவர்கள் கொண்ட ஐசிசி தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் கோலி. குறைந்த ஓவர்கள் கொண்ட சர்வதேச ஐசிசி தொடர்களில் சச்சின் டென்டுல்கர் 58 இன்னிங்ஸ்களில் 2719 ரன்களைக் குவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட 85 ரன்களுடன் குறைந்த ஓவர்கள் கொண்ட சர்வதேச ஐசிசி தொடர்கலில், 64 இன்னிங்ஸ்களில் 2785 ரன்களைக் குவித்து முதலிடம் பிடித்திருக்கிறார் விராட் கோலி.
ஆஃப்கனுக்கு எதிராக போட்டியிலும் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்:
இந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ரோகித் ஷர்மாவுடன் இணைந்து ஓப்பனராக களமிறங்குவதற்கான வாய்ப்பானது சுப்மன் கில்லுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த 2023ம் ஆண்டு மட்டும், 20 ஒருநாள் போட்டிகளில் 72.35 என்ற சராசரியில் 1,230 ரன்களைக் குவித்திருக்கிறார் சுப்மன் கில். ஆனால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டி தொங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக டெங்குவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சுப்மன் கில்லால் விளையாட முடியவில்லை. அதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 11ம் தேதியன்று டெல்லியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராகன போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது போட்டியிலும் சுப்மன் கில்லுக்குப் பதிலாக ஓப்பனராக இஷான் கிஷனே களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது களமிறங்குவார் கேன் வில்லியம்சன்?
இந்தாண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே முழங்கால் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து எந்த விதமான போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார் கேன் வில்லியம்சன். நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து ஆடிய முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் பங்குபெறாத நிலையில், நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடவில்லை. வரும் அக்டோபர் 13ம் தேதியன்று பங்களாேதேஷூக்கு எதிராக நடைபெறும் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட்.
ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட்:
ஒலிம்பிக்ஸ் தொடரில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் டி20 கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருதரப்பினருக்குமான டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்றன. இந்தத் தொடர்களைத் தொடர்ந்து ஒலிம்பிக்ஸ் தொடரிலும் கிரிக்கெட் சேர்க்கப்படவிருக்கிறது. இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. எனினும், கிரிக்கெட்டை 2028 ஒலிம்பிக்ஸில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.