முற்றும் மோதல் : விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த சவுரவ் கங்குலி
சனிக்கிழமை (ஏப்ரல் 15) சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான ஐபிஎல் 2023 போட்டியில் சவுரவ் கங்குலியிடம் விராட் கோலி நடந்துகொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சில நிமிடங்களுக்குப் பிறகு, இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. முதல் வீடியோவில் ஆர்சிபியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களுக்கு முன்பு டிசி டக் அவுட்டில் அமர்ந்திருந்த கங்குலியை கோலி கோபமாக பார்த்தார். இரண்டாவது வீடியோவில், சவுரவ் கங்குலி கோலியுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்து, ரிக்கி பாண்டிங்கிற்கு பின்னால் சென்று மற்ற ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்கினார்.
இன்ஸ்டாகிராமிலும் தொடர்ந்த மோதல்
இந்த வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விராட் கோலி இன்ஸ்டாகிராமில் சவுரவ் கங்குலியை பின்தொடர்வதை நிறுத்தினார். இதனால் மைதானத்தில் நடந்த சம்பவங்கள் எதேச்சையானவை என்று கூறிய பலரும், இருவருக்கும் இடையே பிளவு இருப்பது உண்மைதான் என பேசி வருகின்றனர். இருப்பினும், கங்குலி இன்ஸ்டாகிராமில் கோலியை பின்தொடர்ந்த நிலையில், நேற்று பின்தொடர்வதை நிறுத்தி விட்டார். இருவரும் இது குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்றாலும், 2021 நவம்பரில் கோலியின் கேப்டன்சி பதவி பறிப்பை தொடர்ந்து கங்குலி மீது கோலி கோபமாகவே இருப்பதன் வெளிப்பாடு தான் இது எனக் கூறப்படுகிறது. எனினும் இந்த மோதலை பார்க்கும் ரசிகர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் இப்படி செய்யலாமா என வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.