ஐசிசி தொடர்களில் இந்தியா தொடர்ந்து தோல்வியடைவதற்கான காரணம் குறித்து விளக்கமளித்த சௌரவ் கங்குலி
2013-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தான் இந்தியா கடைசியாக வென்ற ஐசிசி கோப்பை. அதன் பிறகு, நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் தோல்வியையே பரிசாக எடுத்து வந்திருக்கிறது இந்திய அணி. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு நான்கு முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, நான்கு முறையும் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. மேலும், சில தொடர்களில் அரையிறுதி வரை முன்னேறி பின்னர் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இப்படி இந்திய அணி முக்கியமான ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலி.
இந்திய அணியின் தோல்வி குறித்து கங்குலி கூறியது என்ன?
"எல்லா நேரங்களிலும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியாது. இந்திய அணி வீரர்கள் மனதளவில் மிகவும் வலிமையான வீரர்களாவே இருக்கின்றனர். மனஅழுத்தத்தின் காரணமாக முக்கிய போட்டிகளில் அவர்கள் தோல்வியடைவதாக நான் நினைக்கவில்லை. திட்டங்களை சரியாகச் செயல்படுத்தாததே இந்திய அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என நான் நினைக்கிறேன். விரைவில் வெற்றிக் கோப்பையை தங்கள் கைகளில் ஏந்துவார்கள் என நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார் சௌரவ் கங்குலி. இந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த ஆண்டு இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.