SLvsNZ : 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி; அரையிறுதி வாய்ப்பு உறுதி?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து இலங்கை முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பெரேரா மட்டும் 51 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஒருகட்டத்தில் 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை மகேஷ் தீக்ஷனாவின் (38) பொறுப்பான ஆட்டத்தால் 171 ரன்கள் சேர்த்தது.
24 ஓவர்களுக்குள் இலக்கை எட்டிய நியூசிலாந்து
172 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே மற்றும் ராச்சின் ரவீந்திரா இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் கான்வே 45 ரன்களிலும், ரவீந்திரா 42 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து, டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை தக்கவைத்து அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.