SL vs BAN : 37 ரன்களில் 6 விக்கெட்டை இழந்த வங்கதேசம்; இலங்கைக்கு எளிதான இலக்கு
ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த வங்கதேச அணி இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. வங்கதேச அணி 10 ஓவர்களில் 40 ரன்களைக் கூட தாண்டாத நிலையில் மூன்று விக்கெட்டுகளை இழந்து போராடிய நிலையில், நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் தௌஹித் ஹிரிடோய் ஜோடி நிலைத்து நின்று நிதானமாக ஆட முயற்சி செய்தது. ஒரு முனையில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ போராடி ரன் சேர்த்து வந்த நிலையில், ஹிரிடோய் 20 ரன்களில் அவுட்டாக, அடுத்தடுத்து வந்த வீரர்கள் யாரும் கைகொடுக்கவில்லை.
சதமடிக்கும் வாய்ப்பை இழந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ
வங்கதேச கிரிக்கெட் அணி 127 ரன்னில் ஐந்தாவது விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்த 37 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு சுருண்டது. கடைசி வரை போராடிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ, 89 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வடிவிலான ஆசிய கோப்பையில், வங்கதேச அணிக்காக நம்பர் 3 இடத்தில் களமிறங்கி மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். அபாரமாக பந்துவீசிய இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ பத்திரன 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 165 ரன்கள் எனும் எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.