பிசிசிஐ டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது வியாகாம் 18 நிறுவனம்
இந்தியாவில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வியாகாம் 18 கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அடுத்த 2023-28 சுழற்சியில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பிசிசிஐ இந்தியாவில் நடத்தும் அனைத்து இருதரப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இனி ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18இல் ஒளிபரப்பப்படும். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முந்தைய ஒளிபரப்பு உரிமையாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ஒப்பந்தம் ஆஸ்திரேலிய தொடருடன் முடிவடையும் நிலையில், அதன் பிறகு இந்த ஒப்பந்தம் அமலுக்கு வர உள்ளது.
வியாகாம் வசம் உள்ள கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமைகள்
வியாகாம் 18 நிறுவனம் ஏற்கனவே ஐபிஎல் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ளது. ஐபிஎல்லின் டிவி ஒளிபரப்பு உரிமை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வசம் உள்ள நிலையில், ஐபிஎல் 2023 சீசனை வியாகாம் ஜியோசினிமாவில் இலவசமாக ஒளிபரப்பி பார்வையாளர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், இந்த ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் ஐபிஎல்லின் டிஜிட்டல் மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமைகள் என இரண்டையும் தன்வசம் வைத்துள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் மீடியா உரிமையை பெற முடியாமல் தவித்து வந்த வியாகாம் நிறுவனத்திற்கு ஜாக்பாட்டாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. எனினும், 2027 வரை இந்தியாவில் ஐசிசி நடத்தும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்