பாலைவன தேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை: துபாய், அபுதாபி ஸ்தம்பிப்பு; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய நகரங்களான துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நேற்று (டிசம்பர் 18) இரவு முதல் பெய்து வரும் அதீத கனமழையால் அந்நாடே வெள்ளத்தில் மிதக்கிறது. மின்னல் மற்றும் இடியுடன் கூடிய இந்த அகால மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. துபாய் காவல்துறை மற்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கையில், "மிகவும் அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் ஒழிய பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்" என்று அறிவுறுத்தியுள்ளது.
பாதிப்பு
விமான போக்குவரத்து மற்றும் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு
கனமழை காரணமாகத் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் டஜன் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாக இயக்கப்படுகின்றன. எமிரேட்ஸ் (Emirates) நிறுவனம் மட்டும் 13 விமானங்களை ரத்து செய்துள்ளது. துபாய் அரசு ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்து வேலை' (Remote work) செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இதையே பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன. ஷார்ஜாவின் முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பொதுமக்கள் இடுப்பளவு நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடுகள்
கத்தார் மற்றும் அண்டை நாடுகளிலும் பாதிப்பு
இந்த காலநிலை மாற்றம் அமீரகத்துடன் மட்டும் நின்றுவிடாமல் கத்தார், சவுதி அரேபியா போன்ற அண்டை நாடுகளையும் பாதித்துள்ளது. கத்தாரின் தோஹாவில் பெய்த கனமழை மற்றும் மின்னல் காரணமாக, அங்கு நடைபெறவிருந்த 'ஃபிஃபா அரபு கோப்பை' (FIFA Arab Cup) கால்பந்து போட்டியின் பிளே-ஆஃப் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பாலைவனப் பகுதிகளின் உள்கட்டமைப்பு இது போன்ற திடீர் பெருமழையைக் கையாளும் வகையில் அமைக்கப்படாததால், வடிகால் வசதி இன்றி நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தின் தாக்கம்
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எமிரேட்ஸ் கண்ட 75 ஆண்டுகால வரலாற்றின் மிக மோசமான வெள்ளத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே போன்றதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதே இது போன்ற அதீத மழைக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் இது போன்ற 'புயல் நாட்கள்' எமிரேட்ஸில் இன்னும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.