துறைமுகப் பாதுகாப்பிற்கு புதிய அமைப்பு: சிவில் ஏவியேஷன் பாணியில் மத்திய அரசின் அதிரடி
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய துறைமுகப் பாதுகாப்புப் பணியகம் (BoPS) எனும் புதியச் சட்டப்பூர்வ அமைப்பை (Statutory Body) உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இதற்கானத் தீர்மானம் எடுக்கப்பட்டது. விமான நிலையங்களின் பாதுகாப்பைக் கவனிக்கும் சிவில் ஏவியேஷன் பாதுகாப்புப் பணியகம் (BCAS) எவ்வாறு செயல்படுகிறதோ, அதே போன்ற ஒரு வலுவானக் கட்டமைப்பைத் துறைமுகங்களுக்கும் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
புதிய அமைப்பு
புதிய அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரம்
இந்தத் துறைமுகப் பாதுகாப்புப் பணியகம், கடல்வழி கப்பல் போக்குவரத்துச் சட்டம் 2025 இன் (Merchant Shipping Act, 2025) கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகச் செயல்படும். இது மத்தியத் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும். ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி இதன் இயக்குநராகத் தலைமை தாங்குவார். துறைமுகங்களில் பாதுகாப்பு ஆய்வுகளை நடத்துவது, பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்குவது மற்றும் கப்பல் போக்குவரத்து தொடர்பானப் பாதுகாப்பு விதிமுறைகளை வகுப்பது போன்றவை இதன் முக்கியப் பணிகளாக இருக்கும்.
சிஐஎஸ்எஃப்
சைபர் பாதுகாப்பு மற்றும் சிஐஎஸ்எஃப் பங்கு
நவீன கால அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு சைபர் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். இதற்கெனத் தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு, துறைமுகங்களின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் டிஜிட்டல் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும். மேலும், மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை, அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஐஎஸ்எஃப் இனி நாடு முழுவதும் உள்ள சுமார் 250 க்கும் மேற்பட்டத் துறைமுகங்களின் பாதுகாப்புத் தணிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும்.