செவிலியர்கள் போராட்டம்: வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் வலுக்கும் போராட்டம்!
செய்தி முன்னோட்டம்
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 356 ஐ நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் (TNNDA) சார்பில் சென்னையில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட சுமார் 8,000 செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் முதன்மைக் கோரிக்கையாகும். இதற்காகச் சென்னை சிவானந்தா சாலையில் வியாழக்கிழமை (டிசம்பர் 18) உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய செவிலியர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கைது
பேச்சுவார்த்தை தோல்வி மற்றும் கைது நடவடிக்கைகள்
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் பிரதிநிதிகளுடன் சுகாதாரத் துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அரசின் பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று கூறி செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் 500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் முதலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இரவு முழுவதும் கிளாம்பாக்கத்தில் செவிலியர்கள் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோரிக்கைகள்
செவிலியர்களின் முக்கியக் கோரிக்கைகள்
பணி நிரந்தரம் செய்வதுடன், சம வேலைக்குச் சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ₹18,000 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இதே பணியைச் செய்யும் நிரந்தரச் செவிலியர்களுக்கு ₹55,000 வரை வழங்கப்படுகிறது. மேலும், கொரோனா காலத்தின் போது அவசரகால அடிப்படையில் நியமிக்கப்பட்டுப் பின்னர் நீக்கப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பதும் இவர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது.