
ஷிகர் தவானுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கியது டெல்லி நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி குடும்ப நீதிமன்றம் புதன்கிழமை (அக்டோபர் 4) விவாகரத்து வழங்கியது.
ஷிகர் தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியால் கொடுமை மற்றும் மன வேதனைக்கு ஆளானதாக குறிப்பிட்டு விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி குடும்ப நீதிமன்ற நீதிபதி ஹரீஷ்குமார், ஆயிஷா தனது மகனை பார்க்க முடியாமல் செய்து ஷிகர் தவானுக்கு மனவேதனையை ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2012இல் ஷிகர் தவான் ஆயிஷாவை திருமணம் செய்த நிலையில், 2020 முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயிஷாவை பொறுத்தவரைம், ஷிகர் தவானுக்கு முன்பாக ஒருவருடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.
shikar dhawan gets divorce from his wife
மகனை பராமரிப்பது யார்?
ஷிகர் தவான் தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், மகனை இருவரில் ஒருவரின் நிரந்தர பராமரிப்பில் வைக்க எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் வசிக்கும் ஆயிஷா முகர்ஜி வசம் மகன் தங்க ஒப்புக்கொண்ட நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஷிகர் தவான் அவரது மகனைப் பார்க்கவும், அவருடன் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளவும் உரிமை வழங்கியது.
மேலும் மகனின் பள்ளி விடுமுறையில் பாதி காலத்தை தவான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் செலவிட அனுமதி வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.