Page Loader
வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியிலிருந்து வெளியேற்றம்; காரணம் இதுதான்
வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியிலிருந்து வெளியேற்றம்

வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியிலிருந்து வெளியேற்றம்; காரணம் இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2023
06:10 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸை டைம் அவுட் முறையில் அவுட்டாக்கி விவாதப்பொருளாகிய வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியிலிருந்து விலகியுள்ளார். எனினும், இதற்கும் டைம் அவுட் சர்ச்சைக்கும் சம்பந்தம் இல்லை என்றும், காயம் காரணமாகவே அவர் அணியிலிருந்து வெளியேறியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கதேச அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், அதில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Shakib Al Hasan ruled out of ODI World Cup

சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் வங்கதேசம்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை வங்கதேச கிரிக்கெட் அணி ஏற்கனவே இழந்துவிட்டது. எனினும், இந்த தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 2025இல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை இறுதி செய்யும் முனைப்பில் வங்கதேசம் உள்ளது. தற்போது 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் வங்கதேசம் உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறாவிட்டால், சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்புக்கு மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். இந்நிலையில், முக்கியமான இந்த கட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.