டெஸ்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாக். விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த சர்பராஸ் அகமது
டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சர்பராஸ் அகமது பெற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், அவர் இந்த மைல்கல் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, இந்த போட்டிக்கு முன்பு, இலக்கை அடைய எட்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அவர் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் 15 பந்துகளில் 3 பவுண்டரிகளின் உதவியுடன் 17 ரன்கள் எடுத்தார். அவர் இப்போது 55 டெஸ்டில் 38.57 என்ற சராசரியில் 3,009 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 70ஐ (70.43) விட அதிகமாக உள்ளது. இது பேட்டிங்கில் அவரது தாக்குதல் அணுகுமுறையை எடுத்துக் காட்டுகிறது.
டெஸ்டில் சர்பராஸ் அகமதுவின் பயணம்
சர்பராஸ் அகமது 2010இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். இருப்பினும், அவர் தனது இரண்டாவது டெஸ்ட் வாய்ப்பை பெற மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. 2014ஆம் ஆண்டு அவரது திருப்புமுனை ஆண்டாக மாறியது. அப்போது, அவர் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். மேலும் 2017இல் பாகிஸ்தானின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். எனினும், மோசமான ஸ்கோர்கள் காரணமாக 2019இல் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு மீண்டு வந்த அவர், நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு சதம் உட்பட நான்கு இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் அதிகமான ஸ்கோர்களை (86, 53, 78 மற்றும் 118) எடுத்து, மீண்டும் அணியில் இடத்தை உறுதி செய்து கொண்டார்.