சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளிய ரோஹித் ஷர்மா
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் டொமினிகாவில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு புதன்கிழமை (ஜூலை 12) அன்று களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இந்தியா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கிடையே, ரோஹித் ஷர்மா 30 ரன்களுடன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களின் அடிப்படையில் கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாவது அதிக ரன்கள் எடுத்த வீரர்
ரோஹித் ஷர்மா இன்னிங்ஸைத் தொடங்குவதற்கு முன்பு கேன் வில்லியம்சனை விட 27 ரன்கள் பின்தங்கியிருந்தார். இந்நிலையில், தற்போது முதல் நாளில் 30 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17,145 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை (17,142 ரன்கள்) பின்னுக்குத் தள்ளி, சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக ரன்கள் குவித்த ஐந்தாவது வீரராக உள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 25,385 ரன்களுடன் முதலிடத்திலும், ஜோ ரூட் 18,336 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். கிறிஸ் கெயில் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றாலும், அவர் ஓய்வை அறிவிக்காததால், 19,593 சர்வதேச ரன்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.