ஜஸ்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்புவது எப்போது? கேப்டன் ரோஹித் ஷர்மா கொடுத்த அப்டேட் இதுதான்
காயத்தால் நீண்ட காலம் இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் ஜஸ்ப்ரீத் பும்ரா எப்போது அணியில் இணைவார் என்பது குறித்த அப்டேட்டை கேப்டன் ரோஹித் ஷர்மா வழங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சின் முக்கிய தூணாக விளங்கிய ஜஸ்ப்ரீத் பும்ரா, காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் விளையாட்டில் இருந்து விலகியே உள்ளார். அவர் இல்லாத நிலையில், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், பும்ராவின் பந்துவீச்சை ரசிகர்கள் மிகவும் தவறவிட்டனர். ரசிகர்கள் பும்ரா விரைவில் மீண்டும் வருவதைக் காண விரும்புகிறார்கள். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் அயர்லாந்தில் நடக்க உள்ள டி20 போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பும்ரா குறித்து ரோஹித் ஷர்மா பேட்டி
புதன்கிழமை (ஜூலை 26) வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்த புதிய அப்டேட்டை ரசிகர்களுக்கு வழங்கினார். அப்போது, அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் பும்ரா இடம் பெறுவது குறித்து ரோஹித் ஷர்மா உத்தரவாதம் அளிக்கவில்லை. எனினும், இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, பும்ரா போதுமான போட்டிகளைப் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், பும்ராவின் உடற்தகுதி குறித்து அணி நிர்வாகம் தேசிய கிரிக்கெட் அகாடெமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவர் விஷயத்தில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.