பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு
பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 சீசனில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிங்க்-பாலில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் விளையாடாத இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் களமிறங்க உள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தலைமையின் கீழ் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, அடிலெய்டில் நடைபெறும் பிங்க்-பால் டெஸ்டில் கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஜோடி தொடரும் என்பதை உறுதிப்படுத்தினார்.
மிடில் ஆர்டரில் களமிறங்குகிறார் ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா, தான் மிடில் ஆர்டரில் ஏதேனும் ஒரு இடத்தில் பேட்டிங் செய்வார் என்றும் உறுதிபடுத்தியுள்ளார். சுவாரஸ்யமாக, 37 வயதான ரோஹித் ஷர்மா, 2019க்குப் பிறகு மிடில்-ஆர்டரில் பேட் செய்வது இதுவே முதல்முறையாகும். அவர் அக்டோபர் 2019இல் டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கத் தொடங்கினார். மேலும் மிடில் ஆர்டரில் அவர் கடைசியாக ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 2018இல் மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்து, 54.57 சராசரியில் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்களுடன் 1,037 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையே, ரோஹித் கடைசி 10 இன்னிங்ஸ்களில் 20 பந்துகளுக்கு மேல் விளையாடியது ஒரே ஒரு முறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.