டிசம்பர் 4-ல் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் - எம்பி பிரியா சரோஜ் திருமணம்: லக்னோவில் ஏற்பாடுகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியின் மச்சிலிஷஹர் மக்களவை உறுப்பினர் பிரியா சரோஜை வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்களது திருமணப் பத்திரிகைகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள 'ரமடா பை விந்தாம் ஹோட்டல் மற்றும் கன்வென்ஷன் சென்டர்' என்ற நட்சத்திர விடுதியில் இந்தத் திருமண விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
அழைப்பிதழ்
திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனிக்கும் ரிங்கு சிங்
திருமண பணிகளைத் தனது குடும்பத்தினருடன் இணைந்து ரிங்கு சிங் நேரடியாக செய்து வருகிறார்.
தனது தங்கை நேஹாவுடன் இணைந்து திருமணப் பத்திரிகையை அவரே தேர்வு செய்துள்ளதுடன், விருந்தினர்களை அழைப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் முன்னின்று கவனித்து வருகிறார்.
நடப்பு மாத இறுதியில் துபாயில் நடைபெறவுள்ள 'ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்' கிரிக்கெட் தொடருக்காகப் புறப்படுவதற்கு முன்னதாகவே, திருமணத்தின் பிரதான ஏற்பாடுகளை நிறைவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
விஐபிக்கள்
முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நேரில் அழைப்பு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிங்கு சிங்கின் தந்தை மறைந்த சூழலில், இத்திருமணம் அவரது குடும்பத்திற்கு உணர்வுபூர்வமான நிகழ்வாக மாறியுள்ளது.
அலிகரில் இருந்து சுமார் 100 நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும், அரசியல் தலைவர்கள், விளையாட்டுத் துறை முக்கியப் பிரமுகர்கள் பலரும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, தனது தாய் மற்றும் சகோதரருடன் நேரில் சந்தித்துத் திருமண அழைப்பிதழை வழங்க ரிங்கு சிங் நேரம் கேட்டுள்ளதாகவும், துபாய் செல்வதற்கு முன்பாக நவம்பர் 14 அல்லது 15-ஆம் தேதிகளில் இச்சந்திப்பு நடைபெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.