
ரீவைண்ட் 2023 : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சரித்திரம் படைத்தது இந்தியா
செய்தி முன்னோட்டம்
2023 இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடையும் நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு ஆண்டு நம்மைக் கடந்துவிட்டது.
கடந்த ஆண்டு நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கும்போது, இது இந்திய விளையாட்டுகளுக்கு நிச்சயமாக மறக்கமுடியாத ஒரு ஆண்டாக இருந்தது. குறிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் பல புதிய சாதனைகளை படைத்து பிரமிக்க வைத்தனர்.
இந்தியாவைப் போல கிரிக்கெட்டின் மீது அதிக பற்று கொண்ட ஒரு நாட்டில், எப்போதும் பேசுபொருளாக கிரிக்கெட் இருந்தது போய், மற்ற விளையாட்டுகள் மீதும் இது பார்வையைத் திருப்பியது.
இந்நிலையில், 2023 முடியும் இந்த தருணத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செயல்திறனை ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம்.
India won 100 plus medals for first time in Asian Games
ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக 100 பதக்கங்கள்
நீரஜ் சோப்ராவின் தனிப்பட்ட தங்கப் பதக்கங்கள் போன்ற தனிப்பட்ட சாதனைகளை இந்திய விளையாட்டு ஏற்கனவே கண்டுள்ளது.
மேலும், 1928 மற்றும் 1956க்கு இடையில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் போன்ற சாதனைகளும் படைக்கபப்ட்டுள்ளன.
இருப்பினும், ஆசிய விளையாட்டு போன்ற பல விளையாட்டு நிகழ்வில் இந்தியா ஒரு தேசமாக சிறந்து விளங்குவது பெரும்பாலும் இல்லாத நிலையில், சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி அதை மாற்றியது.
இந்தியா, 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றது.
இதன் மூலம் சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவை தவிர்த்து 100 பதக்கங்களுக்கு மேல் வென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றது.
4 Tamilnadu players won medals
பதக்கம் வென்ற நான்கு தமிழக வீரர்கள்
தமிழகத்தில் இருந்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் 8 வீரர்கள் பங்கேற்ற நிலையில், அதில் 4 வீரர்கள் இந்தியாவுக்காக 8 பதக்கங்களை வென்றனர்.
இதன்படி, வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் மகளிர் தடை தாண்டுதலில் வெண்கலம், 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டம் & 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.
மேலும், ராஜேஷ் ரமேஷ் 4x400 மீட்டர் ஆடவர் தொடர் ஓட்டத்தில் தங்கம், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளியும் , சுபா வெங்கடேசன் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டம் & 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றனர்.
பிரவீன் சித்திரவேல் ஆடவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்றார்.
Indian Shooters won 22 medals
இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் அபாரம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் அதிகபட்சமாக 29 பதக்கங்களை வென்ற நிலையில், அதற்கு அடுத்தபடியாக இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் சிறப்பாக செயல்ப்பட்டு 22 பதக்கங்களை வென்றனர்.
இந்த 22 பதக்கங்களில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.
இதற்கிடையே, முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்றன.
அதேபோல் கபடியிலும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்ற நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்று 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது.
India won more than 100 medals in para asian games
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் பதக்கங்களை குவித்த இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
191 ஆடவர் மற்றும் 112 மகளிர் என மொத்தம் 303 வீரர்கள் என கடந்த முறையுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய அளவில் இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் களமிறங்கினர்.
இதில் 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.
இது முன்னெப்போதும் இல்லாததை விட மிக அதிகமாகும். மேலும், இதன்மூலம் பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை இந்தியா பிடித்தது.