ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு - உத்தரகாண்ட் ஆட்டம் சேப்பாக்கத்தில் தொடக்கம்; இலவச அனுமதி
செய்தி முன்னோட்டம்
92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. எலைட் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் குணால் சந்தேலா தலைமையிலான உத்தரகாண்ட் அணியை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் வெற்றியை நழுவவிட்ட தமிழ்நாடு அணி, சொந்த மண்ணில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்குகிறது.
ரஞ்சிக்கோப்பை
முதல் வெற்றிக்காகத் தமிழ்நாடு போராட்டம்
ராஜஸ்தானுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெறத் தவறியதால் தமிழ்நாடு அணி டிரா செய்து வெறும் 1 புள்ளியை மட்டுமே பெற்றது.
இதனால் 'டி' பிரிவில் மும்பை (7 புள்ளிகள்), அரியானா (6 புள்ளிகள்) முன்னிலையில் உள்ள சூழலில், காலிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க தமிழ்நாடு அணிக்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கேப்டன் சாய் கிஷோர், என்.ஜெகதீசன், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், பிரதோஷ் ரஞ்சன் பால் மற்றும் சோனு யாதவ் என நட்சத்திரப் பட்டாளம் அணியில் பலம் சேர்க்கிறது.
மறுபுறம், ரயில்வேஸுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை டிரா செய்து 3 புள்ளிகளுடன் களமிறங்கும் உத்தரகாண்ட் அணி கடுமையான சவால் அளிக்கக் காத்திருக்கிறது.
அறிவிப்பு
ரசிகர்களுக்கு சேப்பாக்கத்தில் இலவச அனுமதி
சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டிகளைக் காண ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெறும் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டி மற்றும் அக்டோபர் 26 முதல் 29 வரை நடைபெறவுள்ள ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டி ஆகிய இரண்டு போட்டிகளையும் ரசிகர்கள் நேரில் கட்டணமின்றி இலவசமாகக் கண்டு களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.